பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து திமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் மத்திய மாவட்ட செயலர் செல்வராஜ்.
திருப்பூர் திமுக மத்திய மாவட்ட செயலாளராகவும், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய மூத்த தலைவர் செல்வராஜ், திமுகவிலிருந்து விலகுவதாகவும், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கப் போவதாகவும் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது நீண்ட அரசியல் பயணத்தை நினைவுகூர்ந்தார். 1976ஆம் ஆண்டு தொழிற்சங்கத்தின் வழியே அரசியலுக்குள் நுழைந்த செல்வராஜ், பின்னர் திமுக நகர செயலாளராகவும், திருப்பூர் மேயராகவும், மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்புகளை வகித்துள்ளார்.
கழகத்தின் பல்வேறு போராட்டங்கள், மக்கள் பிரச்சினைகளுக்கான குரல் கொடுப்புகள் என 50 ஆண்டுகளாக திமுகவுக்காக அயராது உழைத்த அவரது பங்களிப்பு கட்சியினரிடையே நன்கு அறியப்பட்டது. எனினும், சமீப காலமாக கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அவருக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார். குறிப்பாக 2025 முதல், வெளி கட்சிகளிலிருந்து வந்த புதியவர்களுக்கு அதிக அதிகாரமும் முக்கியத்துவமும் அளிக்கப்படுவதாகவும், நீண்டகாலமாக கழகத்திற்காக உழைத்த தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
பல்வேறு கட்சிகளிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்தபோதும், அவற்றை நிராகரித்து திமுகவிலேயே தொடர்ந்து பணியாற்றியதாக அவர் குறிப்பிட்டார். திருப்பூர் தொழில் அதிபர் டாலர் பாலசுப்பிரமணியனின் செல்வாக்கு காரணமாகவே தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக செல்வராஜ் குற்றம் சாட்டினார். திருப்பூர் மேயராக இருந்த தினேஷ் குமாருக்கு திருப்பூர் தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டதற்கு இந்த அழுத்தமே காரணம் எனத் தெரிவித்தார். தானும் போட்டியிட விருப்ப மனு தராத பல்லடம் தொகுதியில் தன்னை நிறுத்துமாறு கட்சி கேட்டபோது, கழகத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளை முழு மூச்சுடன் மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
“ஒரு தொழில் அதிபருக்கு இருக்கும் செல்வாக்கும் அதிகாரமும், கழகத்திற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த எனக்கு இல்லாதது மனதைப் புண்படுத்தியது” என்று வேதனை தெரிவித்த செல்வராஜ், இஸ்லாமிய மக்களுக்கு கபர்ஸ்தான் ஒதுக்கீடு வழங்குவதில் டாலர் சுப்பிரமணியன் தடை ஏற்படுத்தியதே தங்களுக்கிடையேயான மோதலுக்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார். மேலும், தலைவர் ஸ்டாலின் திருப்பூர் வருகைக்கு டாலர் சுப்பிரமணியன் வீட்டைப் பயன்படுத்தி தன்னை ஓரங்கட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தார். இருப்பினும், திமுகவின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை தெரிவித்த அவர், “தளபதி ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆவார். கழகம் ஆட்சிக்கு வரும். அதற்காக நான் என்னைப் பலி கொடுக்கிறேன்” என்றார்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றால் பல்லடம் தொகுதியிலும் இளைஞரை நிறுத்தியிருக்கலாம் என்றும், தன்னை ஏன் நிறுத்தினார்கள் என்பதும் புரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். இறுதியாக, திமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்த செல்வராஜ், எந்தவொரு வேறு கட்சிக்கும் செல்லும் எண்ணமில்லை என்றும், கழகத்திற்கு உண்மையாக உழைக்கும் தொண்டர்களுக்காக அடிப்படை உறுப்பினராக இல்லாவிட்டாலும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் உறுதியளித்தார். இந்த விலகல் அறிவிப்பு திருப்பூர் திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
