தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு குறித்து கேட்டபோது, ”ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க வேண்டும் தேர்தல் முடிவுகள் குறித்து அதீத எதிர்பார்ப்புகள் தேவையில்லை. எங்களுடைய கூட்டணி அமோக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆவார்” எனப் பதிலளித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து கேள்விக்குப் பதிலளித்த அவர், “தேர்தல் களத்தில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம் இந்த கேள்விக்கு வரும் 4ஆம் தேதி பிறகு பதில் அளிக்கிறேன்” என்றார்.
சேலம் கூட்டத்தில் முதலமைச்சரை வைத்துக் கொண்டு திமுக ஆட்சி மீதான விமர்சனத்தை முன்வைத்தது குறித்த கேள்விக்கு, தேமுதிக மீதான விமர்சனங்களுக்கும் தன் மீதான விமர்சனங்களுக்கும் வாழ்க வசவாளர்கள் என்பதே தனது பதில் எனப் பிரேமலதா விளக்கம் அளித்தார்
தொடர்ந்து பேசிய பிரேமலதா, தேமுதிகவின் 10 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
