எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக, திமுக, தவெக என அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம்: தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சிப் பயணத்தை முன்னெடுத்துள்ளார். ஒவ்வொரு தொகுதியாக சென்று திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அது குறித்து முதன் முறையாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து இருந்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை 10 நாட்களுக்குள் இபிஎஸ் ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி திடீர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்திற்காக திண்டுக்கல்லில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இவர்களுடன் செங்கோட்டையனின் கருத்து குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.