2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் அரசியல் வேலைகளிலும், பிரச்சார பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மரங்களின் மாநாடு, ஆடு மாடு மாநாடு என புது ரூட்டை கையில் எடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

சீமான் கடந்த ஜூலை 10ம் தேதி மதுரையில் மாடுகள் மாநாட்டையும், ஆகஸ்ட் 30ம் தேதி திருவள்ளூரில் மரங்களின் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்தார். அதனடிப்படையில் ஆடு மாடுகளுக்கான மாநாடு, மாடு மேய்க்கும் போராட்டம், மரங்களின் மாநாடு நடத்திய சீமானுக்கு வரவேற்பு கிடைத்தது. மாடுகள் முன்பு சீமான் பேசியது விமர்சிக்கப்பட்டாலும், மேய்ச்சல் சார்ந்த அவரின் செயல் பின்னர் வரவேற்பைபெற்றது. இதேநேரம், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் ஆதரவு சீமானுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் மலைகளும், நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவதால் அவற்றை காப்பாற்றும் விதமாக புது வகையான மாநாட்டை சீமான் நடத்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதாவது மலைகளுக்கான மாநாட்டை சீமான் நடத்த உள்ளதாகவும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டத்தில் இந்த மாநாடு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான இடத்தேர்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மலைகளின் மாநாட்டை தொடர்ந்து தண்ணீர் மாநாடு நடத்த இருப்பதாகவும் நாதக கட்சியில் தகவல்கள் கசிகிறது.

தமிழ்நாட்டில் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி, கூடுதல் தொகுதிகள், தொகுதிக்கான கூடுதல் நிதி என பேரம் பேசிக்கொண்டிருக்கும் சூழலில், தனி ரூட்டில் சீமான் பயணிக்கிறார். எப்படி பார்த்தாலும் மாடுகள், மரங்கள், மலைகள் என வித்தியாசமான மாநாடுகளால் சமூக ஊடகங்களிலும் , அரசியல் களத்திலும் எப்போதும் லைம் லைட்டிலேயே இருக்கும் சீமானுக்கு இந்த புது ரூட் வாக்குகளை பெற்று தருமா என்பதை மக்கள் தீர்ப்பில் தெரிய வரும்.

Share.
Leave A Reply

Exit mobile version