கடந்த சில தினங்களாக அதிமுகவில் சில முக்கிய நகர்வுகள் பெரிதாக பேசப்படாமல் நடந்துள்ளன. அதில் ஒன்று விஜய்யை மையப்படுத்தி கட்சி நிர்வாகிகளுக்கு தலைமை கொடுத்த சிக்னல்; மற்றொன்று SIR விவகாரத்தில் தாமதமாக சுதாரித்து விழித்திருப்பது. இந்த இரண்டு விவகாரங்கள் பற்றி எம்.ஜி.ஆர் மாளிகையிலிருந்து பரவி காற்றோடு கலந்த செய்திகளை செவிகளில் சேகரித்து கட்டுரையாக தொகுத்திருப்பதே இத்தொகுப்பு.

ATTACK MODE ON:-

கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே விஜய்யை அதிமுக கூட்டணிக்கு கொண்டு வர எடப்பாடி பழனிசாமி எந்தெந்த வழிகளிலோ முயன்று பார்த்தார். அந்த முயற்சிகளை எல்லாம் நம்பியே கட்சியினரிடம், “கொஞ்சம் பொறுங்கள் ஒரு பெரிய கட்சி, பிரம்மாண்டமான கட்சி கூட்டணிக்கு வரவுள்ளது” என நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருந்தார். அது விஜய் தான் என அரசியல் வட்டாரமே கிசுகிசுக்க, ‘அப்படியெல்லாம் இல்லை’ நழுவி சென்றார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால், அது விஜய் தான் என சொல்லும்படியாக, தன்னுடைய பிரச்சார கூட்டத்திலேயே, ‘தவெக கொடியை’ தனது தொண்டனை வைத்தே அசைக்க வைத்து, “பிள்ளையார் சுழி போட்டாச்சு” எனக்கூறி அதா கிசுகிசுப்பை உண்மையென அம்பலப்படுத்தினார். அப்படி செய்தும் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. விஜய் அந்த அழைப்புக்கு பிடிகொடுக்கவே இல்லை. இதனால் பெரிதும் ஏமாற்றமடைந்து, தமிழக வெற்றிக்கழகத்தை அழைக்கும் முயற்சியை விட்டுவிட்டார்.

இதில் கூடுதலாக செங்கோட்டையன் தவெகவுக்கு தாவி, மேற்கொண்டு பலரை அதிமுகவிலிருந்து இழுக்கும் முயற்சியில் இறங்க, டென்ஷனில் இருக்கும் எடப்பாடியார், “இனி பொறுத்தது போதும்; திமுக VS அதிமுக என்றிருந்த தமிழக அரசியல் களத்தை திமுக VS தவெக என மாற்ற முயற்சிக்கும் விஜய்க்கு இனி பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் என முடிவெடுத்து, விஜய்யை அட்டாக் பண்ண கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார் சமீபத்தில் நடந்த மா.செக்கள் கூட்டத்தில். இந்த ‘அட்டாக்’கை ஆரம்பித்து வைத்தது செல்லூர் ராஜு அவர்கள் தான். இனி அதிமுக மேடைகள், விவாத நிகழ்ச்சிகளில் விஜய்யை கடுமையாக அதிமுகவினர் விமர்சிப்பார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

எரிமலையென வெடித்த எடப்பாடியார்:-

சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மா.செக்களை கடுமையாக வசைபாடியுள்ளார் இ.பி.எஸ். ஏற்கனவே கூட்டணி அமையாத கடுப்பில் இருக்கும் எடப்பாடி, சொன்ன வேலைகளை கட்சியினர் சரிவர செய்யாததால் கோபத்தில் எரிமலையென வெடித்திருக்கிறார். பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் இ.பி.எஸ் எதிர்பார்த்த வேகத்தில் நடக்காதது; அதிமுக தெருமுனை கூட்டங்கள் சரிவர நடக்காதது; அதிமுக – பாஜக கூட்டணி பிணைப்பை கடைமட்டம் வரை எடுத்து செல்லாதது என அடுக்கடுக்கான பிரச்சனைகளால் அதிர்ந்து போயிருக்கும் இ.பி.எஸ் ஒழுங்காக வேலை செய்யாத மா.செக்களை வார்த்தைகளால் லெஃப்ட் – ரைட் வாங்கியிருக்கிறார்.

இவ்வளவு கடுமையான டென்ஷனுக்கு மேற்சொன்ன விஷயங்கள் மட்டும் தான் காரணமா என்றால் இல்லை. இதைவிட பெரும் தலைவலியாக இருப்பது SIR பணிகளால், அதிமுக பலமாக இருக்கும் சுமார் 70 தொகுதிகளில் பெருத்த அடி விழுந்திருக்கிறது. அங்கெல்லாம் நீக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான வாக்குகளால் கதிகலங்கி இருக்கிறது அதிமுக கூடாரம். பலமான பகுதிகளையே நினைத்து கவலைப்படும் சூழல் உருவாகி இருக்கும் நிலையில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள் எல்லாம் இனி அவ்வளவு தான் எனும் அச்சம் தற்போது அதிமுகவை ஆட்கொண்டுள்ளது. ஐந்தாயிரம் வாக்குகளுக்கு குறைவான இடைவெளியில் வென்ற பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், கே.பி.முனுசாமி, ஆர்.காமராஜ் போன்றோர் பீதியில் இருக்கிறார்கள் என்கின்றனர் அதிமுக வட்டாரத்தினர். கடந்த முறை அதிமுகவினர் 281 வாக்கு வித்தியாசத்தில் மொடக்குறிச்சி தொகுதியில் 31,210 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. கவுண்டம்பாளையம் தொகுதியில் 1,23,971 வாக்குகள், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற கிருஷ்ணகிரியில் 25,461 வாக்குகள் என பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், கிணத்துக்கடவு, மதுராந்தகம், கோவை வடக்கு, மடத்துக்குளம் என அதிமுகவினர் வென்ற தொகுதிகளில் ஆயிரக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமையான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொகுதியிலேயே 26,375 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது இதனால் பெரும் சிக்கல் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இறந்தவர்கள் வாக்குகளை பயன்படுத்தி திமுகவினர் கள்ள ஒட்டு போட்டு வென்று வருகிறார்கள் என்ற புள்ளியிலிருந்தே அதிமுக SIR பணிகளை எதிர்க்காமல் இருந்தது. ஆனால், தற்போது இந்த SIR ஆல் அதிமுக வாக்குகளிலேயே ஓட்டை விழுந்திருப்பது தான் அவர்களே எதிர்பார்க்காத ‘ஷாக்’கிங் டிவிஸ்ட். முன்பே “இந்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையென்றால் அதிமுக வாக்குகளும் பறிபோகும் என சீனியர்கள், அரசியல் விமர்சகர்கள் என பலரும் உள்ளும் வெளியிலும் எவ்வளவோ வலியுறுத்தியும் எடப்பாடியார் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாததன் விளைவு தான் இது” என முனுமுனுக்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தினர். தற்போது கொஞ்சம் சுதாரித்துக்கொண்ட அதிமுகவினர், SIR-ல் விடுபட்டுப்போன தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்கும் பணியில் இறங்கி இருக்கிறார்களாம். கைநழுவிய தங்களது வாக்குகளை மீண்டும் எட்டிப்பிடிப்பார்களா? என்ற கேள்விக்கான பதில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் போது தெரியவரும்.

தன்னை சூழ்ந்துள்ள பல்வேறு சோதனைகளுக்கு நடுவே, இப்படியாக நடந்த முக்கிய நகர்வுகளை பொறுத்து அடுத்த சில நாட்களுக்கு செயல்படவுள்ள அதிமுக, ஒரு பெரிய பாசிட்டிவ் டிவிஸ்ட்டுக்காக நம்பிக்கையோடு காத்துக்கொண்டு இருக்கிறது.

நம்பிக்கை – அதானே எல்லாம்…

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version