பக்ரீத் பண்டிகையையொட்டி குர்பானி வழங்கும் நிகழ்வுகளில் த.வெ.க. அரசு தலையிட்டு சிறுபான்மையின மக்களின் மத சுதந்திரத்தை பாதித்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்காலத்தில் எந்தத் தடையும் இன்றி நடைபெற்ற பக்ரீத் திருநாள் குர்பானி நிகழ்வுகளுக்கு, த.வெ.க. ஆட்சியில் முதன்முறையாக இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குர்பானி தொடர்பாக தனிக்குழுக்கள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதோடு, காவல்துறை மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இதனால் சிறுபான்மையின மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

மேலும், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்தியதாக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கும் நிலையில், அதே அரசில் இடம்பெற்றுள்ள சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூறுவது முரண்பாடான நிலைப்பாடு என ஆவடி நாசர் விமர்சித்துள்ளார்.

குர்பானி நிகழ்வுகளைத் தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தபோது அமைச்சர் ஏன் தலையிடவில்லை என்றும், அனைத்தும் முடிந்த பிறகு மேல்முறையீடு செய்வதாக அறிவிப்பது அரசியல் நாடகமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும், சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட அரசாக தன்னை முன்னிறுத்தும் த.வெ.க. அரசு, நடைமுறையில் வேறு விதமாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய ஆவடி நாசர், “நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடு, அரசியல் மேடையில் மற்றொரு நிலைப்பாடு” என்ற இரட்டை அணுகுமுறைக்கு ஐயுஎம்எல் என்ன பதில் அளிக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

குர்பானி விவகாரத்தில் சிறுபான்மையின மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version