தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்ததால் அவரது கடைசி படமாக ஜனநாயகன் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் பொங்கலை ஒட்டி இன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தில் சில இடங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இன்று வெளியாக இருந்த ஜனநாயகன் படத்தை ரத்து செய்து இன்னொரு நாளில் ரிலீஸ் செய்வதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில், படத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்ட தணிக்கை வாரியத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதி ஆஷா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதத்தை கேட்ட நீதிபதி,” ஜனநயாகன் படத்தின் தணிக்கையில் உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது. அதன் தலைவர் அதிகார வரம்பை மீறுகிறாரோ என எண்ண தோன்றுகிறது. ஜனநாயகனுக்கு எதிரான இதுபோன்ற புகார்கள் ஆபத்தானது.
ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து சான்றிதழ் அளிக்க ஒப்புக்கொண்ட பிறகு புகார் அளித்ததில் உள்நோக்கம் உள்ளது. படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின், படத்தை ஆய்வு செய்த குழு உறுப்பினரின் புகாரை ஏற்க முடியாது. ஏற்கனவே படத்தை பார்த்து, தணிக்கை குழுவினர் தெரிவித்த மாற்றங்களை செய்த பின், படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன் ”என உத்தரவிட்டார்.
மேலும், படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டார். தனிநீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்புக்கு எதிராக, சென்சார் போர்டு தரப்பில் உடனடியாக தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்விலான அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
இதை கேட்ட தலைமை நீதிபதி, மனுவாக தாக்கல் செய்தால் எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

