அரசியல் களத்தில் ஒரு கட்சியைத் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் வைத்திருக்கவும், அதன் உட்கட்டமைப்பை அடிமட்ட அளவில் வலுவாகப் பேணவும் எம்.எல்.ஏ., எம்.பி அல்லது அமைச்சர் பதவிகளைத் தாண்டி, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகள் மிக முக்கியமானவை. வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் மூலமாகத்தான் ஒரு கட்சியால் உள்ளூர் பகுதி மக்களுடன் நேரடியாக நெருக்கமாகி, தங்களின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க முடியும்.
அந்த வகையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய போர்க்களமாக மாறப் போகிறது. சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் அதிகபட்ச இடங்களை வாரிக் குவிக்கத் தமிழக வெற்றி கழகம் மிக பிரம்மாண்டமான வியூகங்களை வகுத்து வருகிறது.
கொத்து கொத்தாக இணையும் அதிமுக நிர்வாகிகள்
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுத் தவெகவின் உட்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய், முதல்கட்டமாகத் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுகவின் வாக்கு வங்கியையும், அதன் கட்டமைப்பையும் முழுமையாகக் காலி செய்யத் திட்டமிட்டுள்ளார். அதிமுகவின் முன்னணி தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், உள்ளூர் நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களைத் தவெகவிற்குள் கொண்டு வர அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன் நேரடி வெளிப்பாடாகவே, தற்போது அதிமுகவிலிருந்து கொத்து கொத்தாக முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், அதிமுகவின் நான்கு முன்னாள் அமைச்சர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர். இவர்களை வரவேற்றுப் பேசிய தவெகவின் முக்கிய நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெக எத்தகைய விஸ்வரூபத்தை எடுக்கப் போகிறது என்பதை வெளிப்படையாகவே முழங்கினார்.
திமுக டெபாசிட் காலி… ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!
இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தவெக பெண் எம்.எல்.ஏ குத்துவிளக்கு ஏற்றும்போது, சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவால் அவர் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்து, அது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இதனை மனதில் வைத்தே, இன்று அதிமுகவினரை வரவேற்றுப் பேசிய ஆதவ் அர்ஜுனா, திமுகவிற்கு எதிராக மிக ஆவேசமாகப் பேசினார். “வரும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு மேயர் பதவியைக் கூட திமுகவால் பெற முடியாது; குறிப்பாகத் தலைநகர் சென்னையில் திமுகவிற்கு டெபாசிட் கூட கிடைக்காது” என்று மிகக் காரசாரமாகக் குறிப்பிட்டார். தவெகவின் இந்த அதிரடிப் போக்கு, உள்ளாட்சித் தேர்தலில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது.
மாறும் கூட்டணிக் கணக்குகள்… தனித்து விடப்படும் திமுக
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தொகுதிப் பங்கீட்டில் திமுக தலைமை காட்டிய பிடிவாதத்தால் அதன் கூட்டணிக் கட்சிகள் கடுமையான அதிருப்தியில் இருந்தன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அந்த விரிசல் தற்போது பகிரங்கமாக உடைந்துள்ளது. தற்போதைய சூழலில்,இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் மட்டுமே, தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தாலும், இன்னும் திமுக கூட்டணியில் நீடிப்பதாகத் தெரிவித்துள்ளன.
மறுபுறம் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் ஐயுஎம்எல் (IUML) ஆகிய முக்கியக் கட்சிகள், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தவெகவுடன் கைகோர்த்து மெகா கூட்டணியாகக் களம் இறங்கப் போவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. பாஜகவும், உட்கட்சிப் பூசல்களால் அதிமுகவும் பலமிழந்து காணப்படும் நிலையில், தவெக அமைக்கும் இந்தக் கூட்டணி மிகச் சக்திவாய்ந்த ஒன்றாக உருவெடுத்துள்ளது.
திமுகவின் நிலை என்னவாகும்?
சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் ஏற்கனவே கடும் அதிர்ச்சியிலும் தொண்டர்கள் சோர்விலும் இருக்கும் திமுகவிற்கு, இந்த உள்ளாட்சித் தேர்தல் மிகப்பெரிய சவாலாக அமையப் போகிறது. கூட்டணிக் கட்சிகளின் பலம் இல்லாமல், இடதுசாரிகளை மட்டுமே நம்பிப் பெரும்பாலான இடங்களில் தனித்துச் சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலை திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் சீட் பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டால், இடதுசாரி கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறவும் வாய்ப்புள்ளது.
இது, திமுகவுக்குக் கூடுதல் பின்னடைவாகக் கருதப்பட்டாலும், உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த பல ஆண்டுகளாக திமுக உருவாக்கியிருக்கும் நிர்வாக வலையமைப்பு இன்னும் முழுமையாக சிதையவில்லை. பல மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் திமுகவுக்கு வலுவான அடித்தள ஆதரவு தொடர்ந்து இருக்கிறது.
எனவே, இந்தத் தேர்தலில் தவெகவின் மிகப்பெரிய சவால் வெற்றி பெறுவது அல்ல; சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த ஆதரவை உள்ளூர் அளவிலும் நிரூபிப்பதுதான். அதேநேரத்தில், திமுகவின் சவால், சட்டமன்ற தோல்விக்குப் பிறகும் தனது அமைப்பு வலிமை குறையவில்லை என்பதை நிரூபிப்பதாக இருக்கும்.
அரசியல் ரீதியாக பார்க்கும்போது, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வெறும் உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலாக இருக்காது. 2031 சட்டமன்றத் தேர்தலுக்கான அடித்தளத்தை அமைக்கும் முதல் பெரிய அரசியல் களமாக இது அமையும்.
தவெக இந்தத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தினால், அதன் அரசியல் பிடி மாநிலம் முழுவதும் வலுப்பெறும். மறுபுறம் திமுக எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டால், சட்டமன்றத் தேர்தல் தோல்வி ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே என்ற அரசியல் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும்.
– பா. முகிலன்
