“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.
தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கும் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3-ந் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 10-ந் தேதி திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சன்னதி தெருவில் மக்களை நேரடியாக சந்தித்து, இத்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்த்தார்.
மேலும், அண்ணா அறிவாலயத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை (War Room) கடந்த 12-ந் தேதி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின் “ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தில் மன்னம்பந்தல் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.
இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவ.வீ. மெய்யநாதன், ஆகியோர் உடனிருந்தனர். ஓரணியில் தமிழ்நாடு” திட்டத்தில் இதுவரை 1,35,43,103 நபர்கள் இணைந்துள்ளதாக திமுக தலைமை குறிப்பிட்டுள்ளது.
