2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய மூன்று ஆண்டு கால அவகாசம் இருக்கிறது. இருப்பினும், தேசிய அரசியலில் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான ஆயத்தத்தை இப்போதே தொடங்கிவிட்டதாக டெல்லி பாஜக வட்டாரங்களை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம், விரிவாக்கம் மற்றும் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக வெளியாகலாம் என்ற தகவல்கள் டெல்லி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவால் தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனாலும், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. ஆனால் முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு, குறிப்பாக அரசியலமைப்பு திருத்தங்கள் போன்றவற்றுக்கு, இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம். அதனால் கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது, புதிய அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது, அமைச்சரவையில் பிராந்திய மற்றும் சமூக சமநிலையை உறுதி செய்வது ஆகியவை பாஜகவின் அடுத்தகட்ட இலக்காக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
‘சூப்பர் மெஜாரிட்டி‘ மற்றும் மெகா சட்ட மசோதாக்கள்
அந்த வகையில், தற்போது பாஜக காட்டி வரும் இந்த அசாத்திய அவசரத்தின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல் வியூகம் ஒளிந்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) மூன்றில் இரண்டு பங்கு பலத்தைப் பெற்று, ஒரு ‘சூப்பர் மெஜாரிட்டி’ (Super Majority) கூட்டணியை உருவாக்குவதே பா.ஜ.க-வின் தற்போதைய முதன்மை இலக்காகும்.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற பா.ஜ.க மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கக்கூடிய இரு முக்கிய சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது விவாதிக்கப்பட்டது. முதலாவது, நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் ‘தொகுதி மறுவரையறை’ (Delimitation) சட்டம்; இரண்டாவது, பெண்களுக்கான 33 சதவீத நாடாளுமன்ற இடஒதுக்கீட்டுத் திருத்த மசோதா (Women’s Reservation Amendment Bill). இந்த இரு வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்களையும் எவ்வித முட்டுக்கட்டையும் இன்றி நிறைவேற்ற வேண்டுமானால், நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாத மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதை உணர்ந்தே, பிரதமர் மோடி பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சர்களுக்கு கறார் உத்தரவு
அமைச்சரவை மாற்றத்திற்கான பேச்சு சும்மா வரவில்லை. கடந்த மே 21 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் மோடி தனது அமைச்சர்களுக்கு மிகவும் கண்டிப்பான மற்றும் நேரடியான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். “அனைத்து அமைச்சர்களும் தங்களது செயல்பாடுகளை உடனடியாக ‘ரீபூட்’ (Reboot) செய்ய வேண்டும்; சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சுறுசுறுப்பாகவும், வழக்கமான சிந்தனைகளைத் தாண்டி புதிய சீர்திருத்தங்களை நோக்கியும் நகர வேண்டும்” என்பதே பிரதமரின் கறார் செய்தியாக இருந்தது.
குறிப்பாக, கோப்பு கண்காணிப்பு (File Tracking) முறையைத் தீவிரப்படுத்துவது, முடிவுகளை எடுப்பதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்ப்பது மற்றும் ஒட்டுமொத்த ‘டீம் மோடி’ (Team Modi) கட்டமைப்பையும் மேலும் இறுக்குவது எனப் பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார். கடந்த ஆண்டுகளைப் போல அரசின் சாதனைகளைத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்காமல், தற்போதைய உலகளாவிய எரி சக்தி நெருக்கடி (Energy Crisis) மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியில், அரசு நிர்வாகம் தொய்வின்றி இயங்குவதை உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை மட்டுமல்ல… கட்சியிலும் மாற்றம்
மத்திய அமைச்சரவையுடன் சேர்த்து, பாஜகவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலும் புதுப்பிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024 தேர்தலுக்குப் பிறகு புதிய தலைமுறைக்கு வாய்ப்பு, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம், சமூக சமநிலை போன்ற அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் 2026-27 மாநிலத் தேர்தல்களையும், 2029 மக்களவைத் தேர்தலையும் ஒருங்கிணைந்த அரசியல் திட்டமாக பாஜக அணுகுகிறது என்ற பார்வை உருவாகியுள்ளது.எனினும், இந்த அரசியல் திட்டங்களுக்கு இடையே பல சவால்களும் உள்ளன. பொருளாதார வளர்ச்சி வேகம், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, மாநிலங்களின் கூட்டாட்சி உரிமைகள், தெற்கு மாநிலங்களின் தொகுதி மறுவரையறை குறித்த எதிர்ப்பு, கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள் போன்றவை மத்திய அரசின் அரசியல் கணக்குகளை பாதிக்கக்கூடும். அதனால் அமைச்சரவை மாற்றம் என்பது வெறும் பதவி மாற்றமாக இல்லாமல், அரசியல் சமநிலையையும், நிர்வாக செயல்திறனையும், தேர்தல் கணக்குகளையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் முயற்சியாக அமைய வாய்ப்பு உள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கான அரசியல் வரைபடம்
மொத்தத்தில், மோடி தலைமையிலான அரசு தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தின் இரண்டாம் ஆண்டை எட்டியுள்ள நிலையில், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அரசியல் வரைபடம் இப்போதே வரையப்படத் தொடங்கியுள்ளது. அமைச்சரவை மாற்றம் மற்றும் பாஜக அமைப்பு மறுசீரமைப்பு குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அவை மேற்கொள்ளப்பட இருப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகவே தெரிகிறது. அந்த வகையில், அடுத்த சில வாரங்களில் வெளியாகும் அரசியல் முடிவுகளே, 2029-ஐ நோக்கிய பாஜகவின் உண்மையான திட்டத்தை வெளிப்படுத்தும்.
– பா. முகிலன்
