“அதிமுக – பாஜக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் சேரும் என்பது பொங்கல் முடிந்ததும் தெரியவரும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின், தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக முதல்வர் மிகப் பெரிய தவறு இழைத்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், நீதிபதி மீது நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டு வந்தது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாகும். இது மக்கள் மத்தியில் கொழுந்து விட்டு எரிகிறது.

பூர்ணசந்திரன் தன்னைத் தானே எரித்துக் கொண்டார். திருப்பரங்குன்றத்தில் தீக்குளித்தால் கோயிலின் புனிதம் கெடும் என கருதி கடவுள் மறுப்பை கொள்கையாக கொண்ட பெரியார் சிலை முன்பு தீக்குளித்து உயிரிழந்தார்.

இதையடுத்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என நினைக்கின்றனர். அந்த அடிப்படையில் திருப்பரங்குன்றம் மக்கள் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என பொங்கல் வைத்து வழிபட்டு வருகின்றனர். இது வரவேற்புக்குரியது.

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர். ஜன.6 முதல் ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியம் திட்டம் கோரி அரசு ஊழியர்கள் போராட உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. இப்போராட்டங்கள் ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் முடிவுக்கு வரும்.

அதிமுக – பாஜக கூட்டணிக்கு வேறு எந்தெந்த கட்சிகள் வரும் என்பது பொங்கல் முடிந்ததும் தெரியும். தற்போதுள்ள அதிமுக – பாஜக கூட்டணி இருந்தாலே தேர்தலில் வெற்றி பெறும். பல கட்சிகள் வந்தால் பலமான கூட்டணி அமையும். எந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்பது பொங்கல் முடிந்ததும் தெரிவிப்போம்” என்று அவர் கூறினார். பேட்டியின் போது பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம் உட்பட பலர் உடனிருந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version