சிவகங்கை நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் பெயர், இறந்தவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் சீமான் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
வீரமங்கை வேலுநாச்சியாரின் 229-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள அவரது நினைவிடத்தில் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எஸ்ஐஆர் (SIR) வந்தால் ஆபத்து என்று நாம் தமிழர் கட்சி ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. வயலில் களைகளை அகற்றுவதற்கு பதிலாக மொத்த நிலத்தையும் உழுவது போல், இந்த எஸ்ஐஆர் திருத்தம் உள்ளது. இதனால், தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்களை இழப்போம் என நாங்கள் முன்பே எச்சரித்தோம்.
இந்த பணிக்கு குறைந்தது 6 மாத கால அவகாசம் தேவைப்படும் நிலையில், அவசரகதியில் இது செய்யப்படுகிறது. எங்களது சிவகங்கை வேட்பாளரையே இறந்தவர் பட்டியலில் சேர்த்து, வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே எஸ்ஐஆரின் நம்பகத்தன்மை தெரிந்துவிட்டது. இந்த ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் கடைசி மதிப்பு இந்த வாக்குதான். அந்த வாக்கையும் காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளதால், இது ’ஜனநாயக நாடு’ தானா என்ற சந்தேகம் எழுகிறது.
முன்பெல்லாம் வாக்காளர்கள் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். இன்று ஆட்சியாளர்கள் தங்களுக்கு தேவையான வாக்காளர்களை தேர்வு செய்யும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான வாக்கை வைத்துக் கொண்டு, மற்றவர்களின் பெயர்களை நீக்குகிறது. ’இது ஜனநாயகப் படுகொலை’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரே விமர்சித்துள்ளார்” என்றார்.
தேர்தலுக்கு முன்பு தீபம் ஏற்றும் பிரச்சனையை கொண்டு வருகிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்? தீக்குட்சியை வைத்து தீபமும் ஏற்ற முடியும்; வீட்டையும் கொளுத்த முடியும். ஆனால், நீங்கள் தீபம் ஏற்ற வரவில்லை, வீட்டைக் கொளுத்த வருகிறீர்கள். அதுதான் இங்கு பிரச்சனை.
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தையே நான் முதலில் ஏற்கவில்லை. இதில் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டன? எத்தனை குளங்கள் தூர்வாரப்பட்டன? என்ற விவரத்தைக் கொடுங்கள். 100 நாள் வேலை என்ற பெயரில் தாயக்கட்டை, பல்லாங்குழி, கிளித்தட்டு ஆடுவதுதான் அங்கு நடக்கிறது. உழைக்காமல் ஊதியம் பெறுவதும் ஒருவகை திருட்டு என்று கூறிய காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டே, அவரை அவமதிக்கும் செயலாக இது உள்ளது. உழைக்கும் மக்களை சும்மா இருக்க வைத்துவிட்டால், வேளாண்மை அழிந்துவிடும்” என விமர்சித்தார்.
மேலும், “கரோனா காலத்தில் ‘தேவதைகள்’ என்று கொண்டாடி, செவிலியர்களை பணிக்கு அழைத்தார்கள். ஆபத்து முடிந்ததும் இன்று அவர்கள் தேவையில்லை என்கிறார்கள். இது என்ன ஆட்சி? அதேபோல், பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.3000, ரூ.5000 என அறிவிப்பதன் மூலம் வாக்குகளின் மதிப்பு ஏலம் விடப்படுவது தெளிவாகிறது. 2026 பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சி மாநாட்டில், 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் முழுமையாக அறிவிக்கப்படுவார்கள். தேர்தலை முன்னிட்டு பொங்கல் பரிசுப் பணம் கொடுத்தால் அதனை வாங்கி, அனைவரும் மகிழ்ச்சியாக பொங்கலைக் கொண்டாடிவிட்டு விவசாயி சின்னத்திற்கு வாக்களிக்கவும்” என கிண்டலாக பேசினார்.
