திமுகவின் நான்கரை ஆண்டுகால ஆட்சிக்கு ஜீரோ மதிப்பெண் மட்டுமே வழங்க முடியும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி கடந்த ஜூலை 25 ஆம் தேதி, ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற பெயரில் 100 நாட்கள் மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை திருப்போரூரில் தொடங்கினார். இந்த பயணத்தின் 100-வது நாள் பொதுக்கூட்டம் நேற்று (நவ.9) தருமபுரியில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, “நான் இந்த நடைபயணத்தை தொடங்கிய போது எத்தனையோ தடைகள் வந்தது. நடைபயணத்தை தொடங்கும்போது கடுமையான மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தில் இருந்தேன். ஆனால், இந்த நடைபயணத்தின் மூலம் தற்போது பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது” என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் தமிழ்நாட்டில் பின்தங்கிய சமுதாயங்கள் என்ன நிலையில் உள்ளது? யாருக்கு கல்வி கிடைத்திருக்கிறது? யாருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? என்ற விவரங்கள் தெரியவரும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பயப்படுகிறார்? இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கோழையாக உள்ளார்.
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 1,320 நாட்களாகிறது. ஆனால், முதலமைச்சர் இன்னும் அதனை நடைமுறை படுத்தவில்லை. வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக அரசை நோக்கி நான் எந்த கேள்வி கேட்டாலும், முதலமைச்சரோ, துணை முதலமைச்சரோ பதில் அளிக்காமல், வன்னியர் அமைச்சர்களை வைத்து பதில் அளித்து வருகின்றனர. திமுகவினர் சாதி அரசியல் செய்து வருகின்றனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதலமைச்சரை சுற்றி எ.வ.வேலு, கே.என்.நேரு போன்ற நான்கு, ஐந்து வியாபாரிகள் உள்ளனர். அவர்கள் அமைச்சர்கள் கிடையாது. நகராட்சி நிர்வாகத்தில் 2,500 பணியிடங்களுக்கு அதிகாரிகளை நியமிக்க ரூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை ஏற்றிக்கொண்டு செல்வதில் ரூ.200 கோடி ஊழல், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் தனியார் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.2000 கோடி ஊழல், மணலில் ரூ.4,800 கோடி ஊழல், டாஸ்மாக்கில் மட்டும் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல், தென் மாவட்டங்களில் கனிமவளத்துறையில் ஏராளமான ஊழல் நடைபெற்றுள்ளது.
இந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசில், தமிழகத்தில் புதியதாக நீர்ப்பாசன திட்டங்கள், புதிய மாவட்டங்கள், மருத்துவ கல்லூரியில், சமூக நீதி நடவடிக்கைகள் எதுவும் எதுவுமே தொடங்கப்படவில்லை. இந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சிக்கு ஜீரோ மதிப்பெண்கள் தான் வழங்க முடியும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரின் நிலைமையும் மோசமாகிவிடும்.
தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது. மதுவை கொடுத்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மூன்று தலைமுறைகளை அழித்துவிட்டார். மீதம் இருப்பவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அழித்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
