ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில், “குதிரை பேரம்” நடந்ததாகக் கூறி அதிமுக முன்வைத்துள்ள சிபிஐ விசாரணை கோரிக்கைக்கு திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக-வின் இந்த கோரிக்கை “நியாயமானது” என்று குறிப்பிட்டதோடு, எம்.எல்.ஏ-க்களின் திடீர் ராஜினாமா குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“இந்த விவகாரத்தால் அதிமுக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெற்றி பெற்ற 4 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியைத் திடீரென ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்துள்ளனர். இதற்கு என்ன காரணம்? அண்மையில்தான் மக்கள் வாக்கு அளித்து வெற்றி பெற்ற பதவியை அவர்கள் ஏன் தேவையின்றி இழக்க வேண்டும்? எனவே, இதில் சாதாரணக் கட்சி மாறுவதைத் தாண்டி ஏதோ ஒரு பின்னணி இருக்கிறது,” என்று கூறிய இளங்கோவன், இந்த விவகாரத்தில் மத்திய விசாரணை அமைப்பு விசாரிப்பது தேவையானதுதான் என்றார்.
தவெக-வில் இணைந்த அந்த 4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள்
கே. மரகதம் குமரவேல் (மதுராந்தகம் தொகுதி)
எஸ். ஜெயக்குமார் (பெருந்துறை தொகுதி)
பி. சத்யபாமா (தாராபுரம் தொகுதி)
இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம் தொகுதி)
இவர்கள் கடந்த மே 13 அன்று சட்டமன்றத்தில் நடைபெற்ற த.வெ.க அரசின் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது, கட்சித் தலைமையின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த “குதிரை பேரம்” புகார் தொடர்பாக அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை ராஜ் பவனில் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தேசிய அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்ததை முழுமையாக வழிமொழிந்தார். வட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் ஒவ்வொரு ஆண்டும் போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் தொடர்ந்து கசிந்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், இதனால் நாட்டின் தேசிய தேர்வுத் துறை முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், இரவு பகலாக நேர்மையாகப் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பறிபோய் அவர்கள் பெரும் விரக்திக்கு உள்ளாவதாகவும் கவலை தெரிவித்தார்.
மேலும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP) நாட்டின் கல்வித் தரத்தையே சீரழிப்பதாக உள்ளதாகச் சாடிய அவர், கல்வியில் எப்போதும் முதன்மையாக விளங்கும் கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இந்த புதிய கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்றும், அவர்கள் தங்களுடைய சொந்தப் பாடத்திட்டத்தைப் பின்பற்றிதான் எப்போதும் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தேசிய தேர்வு முகமை நடத்திய யுஜி நுழைவுத் தேர்வில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்திருந்த நிலையில், திமுக-வும் அதற்குத் தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
