தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம், மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறைக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. அதன் நிறைவு நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்று மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

இதற்காக சென்னை வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயிற்சி முகாமில் பேசிய ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வலுவடையாததற்கான முக்கிய காரணம் உட்கட்சிப் பூசல்களும், நிர்வாகிகள் பல்வேறு அணிகளாகப் பிரிந்து செயல்படுவதும்தான் எனக் குறிப்பிட்டார்.

“கட்சியின் உட்கட்சிப் பிரச்சினைகளே காங்கிரஸ் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக உள்ளன. தலைவர்களும், தொண்டர்களும் தனித்தனியாக செயல்படாமல் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சொந்த நலன்களை விட கட்சியின் நலனே முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

மாநில அளவில் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் களப்பணிகள் பாதிக்கப்படுவதாக மேலிடத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாகவும், அந்த நிலையை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில்தான் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அனைத்து கோஷ்டி வேறுபாடுகளையும் மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version