பாமகவின் நிறுவனர் தலைவர் ராமதாஸ், அவரது மகனும் செயல் தலைவருமான அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாமகவின் தலைவராக நானே நீடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் ராமதாஸ்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது…
பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தலைவர் பதவியை நான் விட்டுக் கொடுக்க தயாராக இருந்த போதும் அன்புமணி நம்பவில்லை.
அய்யாவை நம்ப முடியாது. எழுதி கொடுக்க சொல்லுங்கள் என்றார். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துக்காரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார். மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, அவரே (அன்புமணி) செல்போனில் பேசி, என்னை மானபங்கம் செய்துள்ளார். அன்று அமைதி காத்திருந்தால், அதிகாரம் தானாக அன்புமணிக்கு வந்து இருக்கும். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் அதிகாலை 3 மணிக்கு எல்லாம் பேசி, போகாதே,போக வேண்டாம் என்று தடுத்து விட்டார்.
அந்த மாதிரியான நிகழ்வு நடக்காமல் இருந்தால், ஓரிரு ஆண்டுகளில் முடிசூட்டுவிழா நானே முன்னின்று நடத்தியிருப்பேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிசூட்டு விழா நானே முன்னின்று நடத்தியிருப்பேன். 3 ஆண்டுகளுக்கு முன்பு முடிசூட்டு விழா நடந்தது. அப்போது ஆனந்த கண்ணீர் விட்டேன்.
தீர்வு காண்பதற்கு தாரக மந்திரம் என்னவென்றால், தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தந்தைக்குப் பிறகு தனயன். அய்யாவுக்குப் பிறகே அன்புமணி என்பது அனைவரும் சொல்லும் வார்த்தை. குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் இருக்கலாம். ஆனால், தந்தைக்கு மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே, நீதி, நேர்மை, தர்மம்.
என்னுடைய பாட்டாளி சொந்தங்களை, என் உயிருக்கும் மேலாக, தெய்வங்களாக நினைக்கிறேன். அவர்கள் என்னை குல தெய்வம் என்று நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். எல்லாம் எனக்கே வேண்டும் என்றார் அன்புமணி. என்னை கேட்டை சாத்திக்கொண்டு கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருங்கள் என்றார். என் உயிருள்ளவரை அவ்வாறு இருக்க முடியாது என்று கூறினேன்.
என்னுள் இருக்கும் இயற்கையான கோபம் கொஞ்சம் பொங்கி எழுந்து ‘நீயா, நானா பார்த்து விடுவோம் ?’ என்ற முடிவுக்கு கொண்டு வந்தது. மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி செல்லும்போது, அப்பா கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறினார். விமானத்தில் சென்னை திரும்பும்போது, தவறாக கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றார். 2 சொட்டு கண்ணீர் விட்டேன். அது Flight-ன் தரையில் விழுந்தது.
என்னுடைய நெஞ்சில் குத்துகிறார்கள்.. என்னை நடைப்பிணம் ஆக்கி விட்டு நடைபயணம் செய்கிறார்கள். என் கைவிரல்களை கொண்டே, என் கண்ணை குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை உதாசினம் செய்துவிட்டு, என் படத்தை வைத்து உற்சவம் செய்கிறார்கள்.
மண்டபம் பார்த்து விட்டேன். அன்புமணிக்கு தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என சவுமியா அழுத்தம் கொடுத்தார். இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து விட்டன.
கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். 2026 தேர்தல் வரை நானே பாமக தலைவராக நீடிப்பேன். பிறகு வேண்டுமானால் அவர் (அன்புமணி) இருக்கட்டும். இதுதான் என் முடிவு.
அரசியலில் வாரிசு இல்லை. நான் யாரிடமும் ஒப்படைக்கலாம். 46 ஆண்டுகள் உழைத்து உருவாக்கி கட்டிக் காத்த கட்சியில், இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமை ஏற்க எனக்கு உரிமை இல்லையா? எனக்கு உரிமை இல்லையா என கேட்பதே எனக்கு அவமானமாக இருக்கிறது.
ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப் பார்த்துக் கட்டிய பாமக என்ற மாளிகையில், நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் அளவு அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.