சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை ஜூன் 21 ம் தேதிக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2006 – 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

பின்னர், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் 2023 ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் நிர்வாக இயக்குனர்களாக உள்ள மருத்துவமனை மற்றும் நிறுவனங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஒம்பிரகாஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகியிருந்தனர். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையில் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலகளிக்க கோரி முன்னாள் அமைச்சர் பொன்முடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது பொன்முடி தரப்பில், அரசு பணி காரணமாக தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், தற்போது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாகவும், திமுகவின் செயற்குழு உறுப்பினராக இருப்பதால் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகள் தனக்கு வழங்கபட்டிருப்பதையும்,
தனது வயதையும் கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அமலாகத்துறை தரப்பில், பொன்முடி தற்போது திமுகவின் செயற்குழு உறுப்பினராக இல்லை என்பதால் அவர் விசாரணையில் இருந்து ஆஜராக விலக்களிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பொன்முடி நேரில் ஆஜராவதில் விலக்களிக்க கோரிய மனு மீது ஜூன் 21 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி, பிரதான வழக்கை ஜூலை 7 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version