திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த புருஷோத்தமன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி சுற்றியுள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளேட்டுகள், ஸ்பூன், கொடிகள் போன்ற அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைந்து வருகிறது.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதனையும் மீறி உற்பத்தி செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது கைவிடப்பட்டதால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் பிறப்பிக்கப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு தடை தொடர்பான அரசாணையை முறையாக நடைமுறைப்படுத்தவும், விற்பனை செய்வோர், பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, “வழக்கு தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் செயலர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு துறையின் சுற்றுச்சூழல் பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version