‘‘தங்கத்தையே கொடுத்தாலும் திமுகவுக்கு மதுரை மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள், அவர்களுக்கு மூன்று நாமம்தான் போடுவார்கள், ’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஆலோசனைக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் இன்று, மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு பிறகு செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை மாநகராட்சியில் பதவி நீக்கம் செய்த மேயர், மண்டலத் தலைவர்கள், வரிவிதிப்புக்குழு உறுப்பினர், நகரமைப்புக்குழு தலைவருக்கு பதிலாக புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை.

மக்கள் கோரிக்கைகளை பேசுவதற்கு 2 மாதங்களாக மாமன்ற கூட்டம் நடத்துவதற்கு முன் வரவில்லை. நகரமைப்பு பிரிவில் கடந்த காலத்தில் மிகப்பெரிய ஊழல், முறைகேடு நடந்துள்ளது. அதற்குத்தான் நகரமைப்புக்குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அதிமுக பொதுச் செயலாளரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரியாறு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்துவிட்டு வணிகவரித்துறை அமைச்சரை பெருமையாகப் பேசிச் சென்றுள்ளார். இந்த குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவு பெறவில்லை.

அந்த அளவுக்கு திமுக மீது மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். திமுகவினர் வாயில் வடை சுடுவதில் வல்லவர்கள். தற்போது வாய் பந்தலும் போட ஆரம்பித்து இருக்கிறார்கள். இந்த 4 1/2 ஆண்டுகளில் மதுரைக்கு இவர்கள் என்ன செய்து இருக்கிறார்கள். கோரிப்பாளையம் மேம்பாலம், மேலமடை மேம்பாலம் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டவை.

திமுக ஆட்சி அமைந்தபோது நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், இரண்டு மாதங்களில் விமான நிலையம் விரிவாக்கத்துக்கான நிலத்தை கையகப்படுத்தி பணிகளை தொடங்கிவிடுவோம் என்றார். ஆட்சி முடியப்போகிறது பழனிவேல் தியாகராஜனுக்கு இன்னும் 2 மாதம் ஆகவில்லையா?. கனிமொழி எம்பியாக இருப்பதால் தூத்துக்குடி விமானநிலையத்துக்கு திமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?

தமிழக அரசுக்கு மதுரை மாவட்டத்துக்கு செய்வதற்கு மனசு இல்லை. அதை கேட்டுப்பெறுவதற்கு உள்ளூர் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கும் ஆளுமை இல்லை. இவர்களால் மதுரை மாவட்டமும், அதன் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version