பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய், கடந்த 18ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். இதில் பேசிய அவர், செங்கோட்டையன் போன்று மேலும் சிலர் தவெக-வுக்கு வர இருப்பதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம், அக்கட்சியின் கூட்டணி மற்றும் வியூகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் மாற்றத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.
“தவெக தலைவர் விஜய்யை பார்ப்பதற்காக ஏறக்குறைய 3.50 லட்சம் மக்கள் கூடினார்கள். வரலாற்று படைக்கும் கூட்டமாக அது அமைந்தது. இன்று மாலை கட்சித் தலைவர் விஜய்யுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து அடுத்து எங்கு கூட்டம் என்பது குறித்து தெரியவரும்.
கூட்டணி குறித்தான முடிவுகளை விஜய்தான் எடுப்பார். பொங்கலுக்கு பிறகு தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் மாற்றத்தை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். மாற்று கட்சியினர் விரைவில் தவெகவில் இணைவார்கள்.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.
