முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருந்த விழா மேடையில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, திருநெல்வேலி வந்த ஸ்டாலின், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

இந்நிலையில், ரூ.694 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக பிரம்மாண்ட மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் பல்வேறு நிறத்திலான ரோஜா உள்ளிட்ட பூக்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

ஸ்டாலின் வருவதற்கு முன்பாக, விழா மேடையில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் கடித்தது.

இதில் வலியால் துடித்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பாம்பு கடித்ததால் கையில் பெரிய அளவுக்கு அவருக்கு வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் இருந்த கட்டுவிரியன் பாம்பு

முதலமைச்சர் பங்கேற்ற விழா மேடையில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விழா மேடையில் பாம்பு வந்தது எப்படி? விழா ஒருங்கணைப்பாளர்களின் கவனக்குறைவால் இது நடந்ததா? ஆகிய கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேடைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வருவதற்கு முன்பாகவே பாம்பு கண்டறியப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, பாம்பால் கடிபட்ட தூய்மைப் பணியாளர் கண்ணனை பார்க்கக் கூட மாநகராட்சி அதிகாரிகள் யாரும் வரவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version