புதிய அரசின் முதல் அமைச்சரவையில் சிறுபான்மை முஸ்லிம் சமூகப் பிரதிநிதி இடம்பெறாதது கவலையளிப்பதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளை எஸ்டிபிஐ கட்சி சார்பில் தெரிவித்துள்ள முகமது முபாரக், பதவியேற்பு விழாவின்போது, இந்த அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் என்கிற உறுதியை அளித்துள்ளதை வரவேற்றுள்ளார்.
இந்த உறுதியுடன், அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், மாநில உரிமையைக் காக்கும் அரசாகவும் செயல்பவும் வாழ்த்தியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கப் பட்டிருப்பது நீண்டகால மரபை மீறிய செயலாகும் எனவும் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அரசு நடைமுறைகளைச் சிதைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு விழுமியமாகவும் திகழும் தமிழ்த்தாய் வாழ்த்தை விழாவின் தொடக்கத்திலேயே பாடிக் கௌரவிப்பதே முறையானது. இந்த முன்னுரிமை மாற்றமானது தமிழ்ப்பற்றுடைய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, தமிழ்நாட்டின் நீண்டகால மரபைப் புதிய அரசும் பின்பற்றி அதனைப் பாதுகாக்கும் வகையில் சட்டமன்றக் கூட்டம் உள்ளிட்ட அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவதை இந்த அரசு உறுதி செய்ய கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட இந்த அரசின் முதல் அமைச்சரவையில் இடம்பெறாதது மிகுந்த கவலைக்குரியது எனக் கூறியுள்ள முகமது முபாரக்,
தற்போது இந்தியா முழுவதும் முஸ்லிம் சமூகம் பல்வேறு அரசியல் காரணங்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டு வரும் நெருக்கடியான காலகட்டத்தில், சமூக நீதியைப் போற்றும் தமிழகத்திலும் அதே போன்றதொரு புறக்கணிப்பு தொடர்வது ஆரோக்கியமானதல் எனத் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளையும், அவர்களின் அரசியல் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, வரும் காலத்தில் அதனைச் சரி செய்திட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
