தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பாக மக்கள் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய ஆளுநர், பாஜகவின் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்கு வந்து சென்றதாக குறிப்பிட்டார். சட்டப்பேரவையின் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவது தான் மரபு என்று தெரிவித்த அவர், தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆளுநரிடம் எடுத்துக் கூறியும் அதனை அவர் ஏற்க மறுப்பதாக கூறினார்.

தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்குமாறு ஆளுநரிடம் பேரவைத் தலைவர் அப்பாவு தாழ்மையுடன் கேட்டுக் கொண்டும், அதனை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதாக அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார். பின்னர், ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான அறிக்கையில், மைக் அணைக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தது தவறானது என்றும் எந்த மைக்கையும் அணைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

ஆளுநர் வெளியேறிய உடன் மக்கள் மாளிகையில் இருந்து அறிக்கை வருகிறது என்றால் அறிக்கையை முன்பே தயாரித்து வைத்துவிட்டுத்தான் செயல்படுவதாக தோன்றுவதாகவும் அமைச்சர் ரகுபதி கூறினார். எதிர்க்கட்சிகள்கூட தெரிவிக்காத குற்றச்சாட்டுகளை ஆளுநர் கூறியதாக குறிப்பிட்ட அமைச்சர், அரசுக்கு எதிரான தவறான  கருத்துகளை ஆளுநர் வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

அன்னிய முதலீட்டில் தமிழ்நாடு அரசு 6வது இடத்துக்கு சென்றதாக ஆளுநர் குறிப்பிட்டதாக கூறிய அமைச்சர் ரகுபதி, ஆனால், 11.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடு மத்திய அரசே தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி குறித்து ஆளுநர் கூறியது முற்றிலும் பொய்யான கருத்து என்பது மத்திய அரசின் அறிக்கைகளே கூறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version