எம்.பி. தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதற்கு திமுகவும், மதிமுகவும்தான் காரணம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி தொகுதியில் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றேன். 2024-ல் மீண்டும் நான்தான் அங்கு போட்டியிட்டு இருக்க வேண்டும். ஆனால் திமுகவில் இருந்தவர்கள், கூட்டணியில் இருந்தவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக எனக்கு சீட் மறுக்கப்பட்டது இன்றளவும் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுக்கிறது.

வைகோ எனது சிறந்த நண்பர். அவரோ, அவரது மகனோ தமிழகத்தில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட்டு இருக்கலாம். எங்களுக்கு ஒதுக்கப்பட்ட திருச்சி தொகுதிதான் வேண்டும் என்று குறிப்பிட்டு அவர்கள் கேட்டு பெற்றதால் நிச்சயமாக எனக்கு வருத்தம் தான். ஆனால் நான் வைகோவை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. மிகப்பெரிய கூட்டணியில் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் ஏற்படுவது வழக்கம். அதையும்தாண்டி ராகுல்காந்தி மீதான நம்பிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.

இதுபோன்ற அனுபவம் எனக்கு ஏற்கனவே 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்தபோது ஏற்பட்டது. அப்போது நான் போட்டியிட கூடாது என்ற நிபந்தனையின்பேரில் பாஜகவுக்கு ஜெயலலிதா 7 சீட்டுகள் கொடுத்தார். அப்போது போட்டியிடாத என்னை பாஜக மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக்கினார்கள்.

இவ்வாறு அந்தப் பேட்டியில் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version