சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காக ஒதுக்கப்பட்ட அந்த ரூ.4,000 கோடி என்னதான் ஆச்சு என்று மழை வெள்ளத்தை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அக்கட்சி புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சியும், முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் இருக்கும் காட்சி உள்ளது.

இதை ரீ ட்விட் செய்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “திமுக அரசால் டிசம்பர் தோறும் தத்தளிக்கும் தலைநகர்! மழைநீர் வடிகால் பணிகளுக்காக நாலாயிரம் கோடி செலவழிக்கப்பட்டிருப்பதாக நான்கரை ஆண்டுகளாகத் திமுக அரசு பெருமை பேசிய நிலையில், நாலாப்புறமும் சென்னையில் மழைநீர் தேங்கியிருக்கிறது. உண்மையில் நாலாயிரம் கோடி என்னதான் ஆனது?

நான்கு பம்பு செட்டுகள் வாங்கத்தான் ரூ.4,000 கோடி செலவழிக்கப்பட்டதா? அல்லது “நாடு போற்றும் நல்லாட்சி” என்று நாணமே இல்லாமல் வெற்று விளம்பரம் வெளியிட செலவழிக்கப்பட்டதா? ஆட்சி அரியணை ஏறியதிலிருந்து ஒவ்வொரு டிசம்பர் மாதமும் வெள்ளத்தில் மிதக்கவிடும் சாதனை போதாதென்று ஆட்சி முடியும் கடைசி ஆண்டில் டிசம்பர் மாதம் தொடங்கிய மூன்று நாட்களுக்குள்ளேயே சென்னையை வெள்ளத்தில் தத்தளிக்கவிட்டுப் பெரும் சாதனை புரிந்திருக்கிறது அறிவாலய அரசு.

இந்தக் கொடூரத்திற்கு மத்தியில், சென்னையில் பல இடங்களில் மழைநீரோடு கழிவுநீரையும் கலக்கவிட்டு, நோய்த் தொற்றை உருவாக்கி, மக்களைக் கொல்லும் எமனாகவும் உருமாறியிருக்கிறது திமுக அரசு. மொத்தத்தில், மழைநீர் வடியக் கூட வழிவகுக்க இயலாத திறனற்ற நிர்வாகத்தை வைத்துக் கொண்டு விடியல் அரசு என்று மார்தட்டிக் கொள்வதைக் கண்டால் தலையில் தான் அடித்துக் கொள்ளத் தோன்றுகிறது!” என குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version