தவெக கொடிக்கும், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் கொடிக்கும் எந்த வித ஒற்றுமையும் இல்லை எனவும் பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென தவெக சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக கட்சி கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், பல தகவல்களை மறைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கொடிக்கும், தவெக கொடிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான எதிர்கால திட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தவெக கொடி ஒரு கட்சி கொடி மட்டுமல்ல என்றும் தமிழகத்தின் கலாச்சார பெருமை, வரலாற்று பெருமை மற்றும் சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையுடன் பகுஜன் சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியதாகவும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனித்துவத்துடன் தவெக கொடி உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வாக்களர்களை குழப்பும் வகையில் உருவாக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மனுவை உச்சபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version