2026-ம் ஆண்டுக்கான தேர்தல் பணிகள் மெல்ல மெல்ல தொடங்கையுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது சூறாவளிப் பிரசாரத்தை இப்போதே தொடங்கி விட்டனர். அந்த வகையில் நடிகர் விஜய்யும் தனது அரசியல் பயணத்தில் வேகமெடுக்க தொடங்கியுள்ளார். ஜனநாயகன் படத்தை முடித்த விஜய், தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

இந்தாண்டுக்கான த.வெ.க. செயற்குழு கூட்டம் சமீபத்தில் சென்னை பனையூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பல்வேறு நிலைகளில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை பணியும் தொடங்கியது. தற்போதைய நிலையில், இதுவரை ஒன்றரை கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பெரிய கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.வில் கூட உறுப்பினர்களின் எண்ணிக்கை இதே நிலையில்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த வாரத்தில் இருந்து மீண்டும் உறுப்பினர் சேர்க்கை பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டு உள்ளார். வீடு, வீடாக சென்று த.வெ.கவிற்கு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக கட்சி தலைமைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் மூலம் தொடர் கட்சி பணிகளை முன்னெடுக்கவும் உரிய அறிவுறுத்தல்களை கட்சி தலைமை வழங்கி உள்ளது. கட்சியின் இரண்டாவது மாநாட்டை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version