தவெக தலைவர் விஜய் சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய ஊர்களில் தனது இரண்டு கட்ட பிரசாரங்களை விஜய் முடித்திருந்தார்.
மேலும், டிசம்பர் 20, 2025 உடன் முடிவடைய திட்டமிடப்பட்டிருந்த சுற்றுப்பயண அட்டவணை, தற்போது 2026 பிப்ரவரி 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனிக்கிழமை (செப். 27) தனது 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார்.
விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில், தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து, தனது சொந்த காரில், பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். ஏறக்குறைய 34 மணி நேரத்திற்கு பிறகு தனது இல்லத்தை விட்டு வெளியே வருவது குறிப்பிடத்தக்கது.
அங்கு கரூர் கொடுந்துயர் விபத்து குறித்தும், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தனது இல்லத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் காணொளி வாயிலாக இணைந்துள்ளதாகவும், கரூர் விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஒருநபர் ஆணையம் குறித்தும், தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால், மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து வழக்கறிஞர்களிடம் விஜய் கேட்டு அறிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை, இன்று பிற்பகல் 2:15 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற உள்ளது. இந்த வழக்கு குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் தெரிகிறது.
40 மணி நேரம் ஆகியும் கட்சித் தலைவர் என்ற முறையில், இன்னும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், தானும் தனது கட்சி நிர்வாகிகளும் வழக்கில் இருந்து தப்புவது குறித்து ஆலோசிப்பது ஏன் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.