மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள, தவெக தலைவர் விஜய், திருச்சி செல்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.
2026ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனி இங்கிலாந்து தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
அதேபோல் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆடு, மாடு, மரங்கள் மாநாடு என தனிப்பாதையில் அரசியல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த உள்ளார்,
அதன் தொடக்கப் பகுதியாக இன்று திருச்சியில் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இந்த பிரசாரத்திற்கு 23 நிபந்தனைகளை திருச்சி காவல்துறை விதித்தது..இதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலம் திருச்சி புறப்படுகிறார்,
இந்தநிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட சென்னை விமான நிலையம் நோக்கி காரில் சாலை மார்கமாக சென்னை விமான நிலையத்திற்கு சென்று, சென்னை விமான நிலையத்தில் ஆறாம் நம்பர் நுழைவாயில் வழியாக தனி விமானத்தில் ஏறுவதற்கு சென்றார்.
இதனை அடுத்து தனி விமான மூலம் திருச்சிக்கு சென்று திருச்சியில் உள்ள மரக்கடை பகுதியில் முதல் பிரச்சாரக் கூட்டம் மற்றும் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் வாகனத்தில் செல்லும்போது தன்னை பின் தொட வேண்டாம் என்றும் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.