கரூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர். புஸ்ஸி ஆனந்த், மற்றும் சி.டி.குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். விஜய் தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இதற்கிடையில், தவெக தலைவர் விஜய், 15 மாவட்ட செயலாளர்களை வாட்ஸ்அப் கால் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் இன்று கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து தங்களது ஆறுதலை தெரிவித்ததோடு விஜய் வரவுள்ள தகவலையும் தெரிவித்துள்ளனர்.
மேலும் விஜய் வரும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.