தமிழக வெற்றி கழக ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டும் வகையில் உரையாடிய டெலிகிராம் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அரசு தரப்பில் தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இதற்கிடையில், கரூர் சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டி வந்தனர்.

இதற்கிடையில், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைப் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். பின்னர், அவரது பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் வெளியான நிலையில் சில நிமிடங்களிலேயே அதனை நீக்கினார்.

அதில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி…
சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது….
இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.

இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது.
பேய் அரசாண்டால் பிணந்தி சாஸ்திரங்கள்!” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றி கழக ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டும் வகையில் உரையாடிய டெலிகிராம் பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆட்களை திரட்டுவது, திட்டமிடுவது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த டெலிகிராம் பக்கம் துவங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version