திருச்சியில் வருகிற ஜனவரி மாதம் 2-ம் தேதி பாத யாத்திரையை வைகோ தொடங்க இருப்பதாக மதிமுக அறிவித்துள்ளது.

மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள  தாயகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார்.  பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.இராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம்:1

தமிழ்நாட்டின் வாக்காளர்களில் இடம்பெயர்ந்தவர்கள், முகவரியில் இல்லாதவர்கள் என்று 64 லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது ஐயப்பாட்டை எழுப்புகிறது.

தகுதி உள்ள வாக்காளர்கள் பெயர், பட்டியலில் விடுபட்டு இருந்தால்  உடனடியாக படிவம் 6ஐ பூர்த்தி செய்தும், பெயர் சேர்ப்புக்கு ஆட்சேபனை இருப்பின் படிவம் 7 , முகவரி மாற்றத்திற்கு படிவம் 8  ஆகியவற்றை ஜனவரி 18ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும் .

சட்டமன்றத் தேர்தல் களத்தில் தேர்தல் ஆணையத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து தீவிரமாக  கள ஆய்வு செய்யும் கடமையை மறுமலர்ச்சி திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம் :2

கடந்த 2005-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை   (MGNREGA)  கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில்  செயல்படுத்தியது. இச் சட்டம் வறட்சி, கிராமப்புற துயரங்கள் மற்றும் பொதுமக்களின் வேலையின்மை ஆகியவற்றை தீர்க்க ஒரு முக்கியமான மற்றும் நிலையான தீர்வாக அமைந்தது.

கிராமப்புற மக்களின் வறுமையைப் போக்கி, ஏழ்மை நிலையில் இருந்து விடுபடுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது. ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2014 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்  ஒட்டுமொத்தமாக செயல் இழக்க சதிகளை அரங்கேற்றி வந்தது.

2008 மற்றும் 2011 க்கு இடையில், இந்தத் திட்டத்திற்கான ஆண்டு ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக இருந்தது. ஆனால் மோடி அரசு இத்திட்டத்திற்கான நிதியை ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தில்  குறைத்துக் கொண்டே வந்தது. 2021-2022-இல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், 2022 – 2023-இல் 73,000 கோடி ரூபாயும், 2023-2024-இல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டுதோறும் நிதியை ஒன்றிய அரசு குறைத்தது.

2023-2024-இல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான். இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்க முடியாமல் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. அதுமட்டுமல்ல, இத்திட்டத்தில் பயனாளிகள் ஆதார் இணைக்கவில்லை என்று நாடு முழுவதும் இலட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களை ஒன்றிய அரசு பட்டியலில் இருந்து நீக்கியது.

அதிலும் குறிப்பாக பாஜக ஆளும் பொறுப்பில் இல்லாத மாநிலங்கள்  நிதி ஒதுக்கீட்டில் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன. இந்தச் சூழலில்தான் ஒன்றிய அரசு, இந்த திட்டத்தின் பெயரை, ‘விகிஷ்த் பாரத் கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் (கிராமின்) Viksit Bharat-Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G) (விபி-ஜி ராம்-ஜி)’ என மாற்றி உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் பெயரிலிருந்து தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயரை நரேந்திர மோடி அரசு நீக்கி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்த புதியச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தீர்மானம்: 3

மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, டெல்லி, அஸ்ஸாம், ஹரியானா, ஒடிசா, பீகார், கேரளா ஆகிய மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் பரவலாக தாகுதல்கள் நடந்தேறியுள்ளது.

2025 ஜனவரி முதல் இந்த டிசம்பர் வரை நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் மீது 700 க்கும் அதிகமான தாக்குதல்கள் நடந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அவை உச்சகட்டம் பெற்று  கிறிஸ்தவ தின கொண்டாட்டங்களின் மீது கொடூரமான தாக்குதல்களை பாசிச இந்துத்துவ மத வெறி குண்டர்கள் நடத்தியுள்ளனர்.

கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான சாண்டா உடை அணிந்து கொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்ற கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்களை தாக்குவது தொடங்கி, பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், தேவாலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ தின கொண்டாட்டங்கள் அனைத்தின் மீதும் ஒருங்கிணைந்த முறையில் மேற்கண்ட மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் பாசிச குண்டர் படை தாக்குதல் நடத்தியுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

இந்துத்துவப் பாசிசத்தை வேரறுக்க ஜனநாயக முற்போக்குச் சக்திகள் அணி திரண்டுப் போராட வேண்டும்.

தீர்மானம் :4

தமிழ்நாட்டின் நலனுக்காக 6,000 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டு சாதனைச் சரித்திரம் படைத்தவர் வைகோ. காவிரி நதி நீர் உரிமை காக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றவும், முல்லைப் பெரியாறு அணையைப் பாதுகாக்கவும், தென்னக நதிகளை இணைக்கவும், முழு மதுவிலக்கை நடைமுறைப் படுத்தக் கோரியும், நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இதுவரை 10 நடைபயணங்கள் மேற்கொண்ட வைகோ, தற்போது சமத்துவ நடைபயணத்தை அறிவித்து இருக்கிறார்.

போதைப் பொருள், கஞ்சா, அபின் பழக்கத்திலிருந்து இளைய தலைமுறையை மீட்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சாதி சமய நல்லிணக்கம் தழைத்து ஓங்க வேண்டியும், இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்தி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தொடர பரப்புரை மேற்கொள்ளவும் 2026 ஜனவரி 2 ஆம் நாள் திருச்சியில் தொடங்கி, ஜனவரி 12 ஆம் நாள் மதுரையில் நிறைவு செய்கிறார். அவருக்கு தமிழ்நாடு பெருமக்கள் ஆதரவு தருமாறு மதிமுக கேட்டுக்கொள்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version