கூட்டணி கட்சியினருக்கு வி.சி.க.வினர் ஒற்றுமையாக பணியாற்றவில்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “தேர்தலில் நம்முடைய கட்சியின் சார்பில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டது. ஆங்காங்கே தோழர்கள் தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். ஒரு சில தொகுதிகளை தவிர.

அது தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் நம்முடைய தோழமை கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் இருந்து தோழர்கள் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என்கிற தகவல்கள் வந்துள்ளன. அது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

புதிய முகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சியிலும் இருக்கின்ற நடைமுறைதான். தி.மு.க.வில் கூட 60 புதிய முகங்களுக்கு வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அப்படியென்றால் 60 எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. அதைப் பற்றி யாருமே பேசவில்லை. விடுதலை சிறுத்தைகளை பற்றி மட்டும் பேசுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எடுத்த முயற்சிக்கு திருமாவளவன் இணங்காமல் தி.மு.க. கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு முதன்மை காரணியாக இருந்திருக்கிறார் என்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சகித்துக் கொள்ள முடியவில்லை. நம்மீது அவர்களின் காழ்ப்புணர்வை கக்க வேண்டும் என்பது அடிப்படை காரணம்.

பா.ஜ.க. எங்கள் கொள்கை எதிரி என்று விஜய் சொன்னார். அந்த ஒற்றை சொல்லை தவிர அடுத்த வார்த்தை பா.ஜ.க.வுக்கு எதிராக அவர் பேசியதே இல்லை. அவரது நோக்கம் தி.மு.க. ஆட்சியை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்தி விட்டால் அடுத்தது யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பதை பற்றி அவருக்கு அக்கறை இல்லை. பா.ஜ.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் அவருக்கு கவலை இல்லை. அந்த நோக்கத்தில்தான் அவர் செயல்படுகிறார் என்பதை நாம் தேர்தல் களத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version