வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தங்கும் விடுதிகள் மற்றும் பி.ஜி. (PG) கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் பி.ஜி. உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில மாதங்களாக எரிவாயு விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவதாகவும், ஒரு சிலிண்டரை 6,000 முதல் 7,000 ரூபாய் வரை கொடுத்து வாங்க வேண்டிய இக்கட்டான சூழல் நிலவுவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பல விடுதிகளில் தற்போது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தியே உணவு சமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது விறகு மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால், வேறு வழியின்றி விடுதி கட்டணத்தை உயர்த்துவதாக உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். வரும் மே 5-ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இதன்படி, ஏசி மற்றும் ஏசி இல்லாத அறைகளுக்கான கட்டணம் சுமார் 1,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின்படி, இருவர் தங்கும் ஏசி அறைக்கு 9,000 ரூபாயும், மூவர் தங்கும் ஏசி அறைக்கு 8,000 ரூபாயும் குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி இல்லாத அறைகளுக்கும் இதேபோல் விகிதாச்சார அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விடுதிகளில் வழங்கப்படும் கூடுதல் வசதிகளைப் பொறுத்து இந்த விலை மாறுபடலாம் என்றும், இக்கட்டான இந்த சூழலில் விடுதிவாசிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு, சென்னையில் தங்கிப் பணியாற்றும் ஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version