“மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான், விடையே தெரியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், “தனது வழிகாட்டி என்பதால், தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அன்ணாவை வைத்தவர் எம்ஜிஆர். அவர் ஆரம்பித்த கட்சியை கைப்பற்றியவர்கள் இப்போது என்னெவெல்லாம் பண்ணுறாங்கன்னு உங்களுக்கே தெரியுமே.
தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவர்களுக்கும், வாய்க்கால் வரப்பு தகராறு கிடையாது. அவர்களுக்கு வேண்டுமானால் நம் மீது வன்மம் இருக்கலாம். ஆனால், நாம் அப்படி கிடையாது. உங்களை, நம்மை பொய் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நாடகமாடுபவர்களை கேள்வி கேட்காமல் விடப்போவது இல்லை. காஞ்சிபுரத்துக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. எனது முதல் களப்பயணம் பரந்தூரில்தான் தொடங்கியது. இப்போது ஒரு பெரிய மன வேதனைக்குப் பின்னர் மக்கள் சந்திப்புக்கு வந்துள்ளதும் இந்த காஞ்சிபுரத்துக்குத்தான்.
எல்லா மக்களுக்கும் நல்லது செய்யவேண்டும் என்ற லட்சியத்தோடுதான் அரசியலுக்கு வந்துள்ளோம். அதனால்தான் மக்களிடம் செல் என்ற அண்ணாவின் வழியை பின்பற்றுகிறோம். ஆனால், மக்களிடம் செல் எனச் சொன்ன அண்ணாவை மறந்தது யார்? கொள்கை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் கட்சியை நடத்தும் முதல்வர், நமக்கு கொள்கையில்லை என சொல்கிறார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என சொல்லும் நமக்கு கொள்கையில்லையா?
