பிப்ரவரி 2026-க்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) மற்றும் இந்திய வீராங்கனை அருந்ததி ரெட்டி (Arundhati Reddy) ஆகியோர் ‘ மாதத்தின் சிறந்த வீரர்’ (Player of the Month) விருதை வென்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்ஸாதா ஃபர்ஹான், பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பையில் (இலங்கையில் நடைபெற்றது) நிகழ்த்திய அசாத்தியமான சாதனைக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.
2014 டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி ஒரு தொடரில் எடுத்த அதிகபட்ச ரன்களான 319 என்ற சாதனையை, ஃபர்ஹான் இந்த ஒரே தொடரில் 383 ரன்கள் குவித்து முறியடித்துள்ளார். ஒரே டி20 உலகக்கோப்பைத் தொடரில் 2 சதங்கள் (நமீபியா மற்றும் இலங்கை அணிக்கு எதிராக) விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை இவர் படைத்துள்ளார்.
7 போட்டிகளில் 76.60 என்ற சராசரியுடனும், 160.25 என்ற ஸ்டிரைக் ரேட்டுடனும் விளையாடித் தொடரின் அதிகபட்ச ரன் குவித்த வீரராக உருவெடுத்தார்.
ஆஸ்திரேலிய மண்ணில் மிரட்டிய அருந்ததி ரெட்டி: இந்தியப் பெண் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற முக்கியக் காரணமாக இருந்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளில் மட்டும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது வாழ்நாள் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியப் பெண்கள் அணி தொடரை வெல்வது கடினம் என்ற சூழலில், இவரது துல்லியமான பந்துவீச்சு இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

