இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கப்பட்ட நிகழ்வு, ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, அடுத்த மாதம் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேப் போல பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக விளையாடவுள்ளது. அதனை தொடர்ந்து 14-ம் தேதி பாகிஸ்தானையும், 19-ம் தேதி ஓமனையும் எதிர்கொள்ளவுள்ளது.
இந்த ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கேப்டனாக சூர்யகுமார் யாதவும், சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பதவியும் வழக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் விளையாடினார். அதன்பின் நடைபெற்ற தொடர்களில் இந்திய டி20 அணியின் கேப்டனாக அக்சர் படேல் செயல்பட்டார். அந்த சூழலில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்சர் படேல் பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப்,
”துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து அக்சர் படேலுக்கு தேர்வுக்குழு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன். பத்திரிகையாளர் சந்திப்பைப் பார்த்து அவர் இந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருக்கக் கூடாது. அக்சர் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே அவருக்கு விளக்கம் கொடுக்கப்பட வேண்டும்” என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.