பார்வையற்றோர் மகளிருக்கான T20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

இந்தியா மற்றும் இலங்கையில் 6 அணிகள் பங்கேற்ற பார்வையற்றோர் மகளிருக்கான T20 உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய 6 அணிகள் கலந்துகொண்ட போட்டி கடந்த 11ம் தேதி டெல்லியில் தொடங்கியது.

லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளின் முடிவில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இலங்கை தலைநகர் கொழும்புவில் இறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தீபிகா, பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நேபாள அணியில் சரிதா கிமிரே 35 ரன்களும், பிமலா ராய் 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் நேபாள அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் ஜமுனா ராணி, அனு குமாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.  115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கருணா 42 ரன்களும், புலா சரேன் 44 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.  12.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 117 ரன் எடுத்து, நேபாள அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல், இந்திய அணி 100 சதவீத வெற்றியுடன் உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version