ஈட்டி எறிதலில் நடப்பு உலக சாம்பியனான நீரஜ் சோப்ராவுக்கு கர்நாடகாவில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை (05.07.2025) பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் ”கிளாசிக் 2025 ஈட்டி எறிதல்” போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கர்நாடகாவிற்கு நீரஜ் சோப்ரா வந்தடைந்தார்.
அப்போது, நீரஜ் சோப்ரா, முதலமைச்சர் சித்தராமையாவை அவரது காவேரி இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அவரை முதலமைச்சர் கௌரவித்தார். நீரஜ் சோப்ராவின் விளையாட்டு வாழ்க்கையில் மேலும் வெற்றி பெற முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார். இவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேப்போல, நீரஜ் சோப்ராவை கர்நாடக ஒலிம்பிக் சங்கம் கௌரவித்துள்ளது. கர்நாடகாவின் விளையாட்டு சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில், கண்டீரவா மைதானத்திற்கு அருகிலுள்ள ஒலிம்பிக் அமைப்பு அலுவலகத்தில், ஹால் ஆப்பேம் அருங்காட்சியகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு முதல் முறையாக, கர்நாடகாவிற்கு வெளியே இருந்து வந்த ஒரு விளையாட்டு வீரரின் சாதனைகளை விவரிக்கும் புகைப்படம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.