ஐபிஎல் தொடரில் மிகவும் ரசிகப்படக்கூடிய திறமையான வீரராக வளம் வருபவர் வைபவ் சூர்யவன்ஷி. இளம் வீரரான இவர் இத்தொடரில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில்,
குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வைபவ் சூர்யவன்ஷி 16 பந்துகளில் அரை சதத்தை கடந்து அசத்தினார். தொடர்ந்து 28 பந்துகளில் 97 ரன்களை எடுத்து அசத்தினார் சூர்யவன்ஷி. ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல். இவரது சாதனையை சூர்யவன்ஷி முறியடித்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பிரபுல் ஹின்ஜ் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதனால் அந்த சாதனை படைக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். எனினும், கிறிஸ் கெயிலின் மற்றொரு சாதனையை முறியடித்தார் சூர்யவன்ஷி. நடப்பு தொடரில் 15வது ஆட்டத்தில் 65 சிக்சர் அடித்து, ஒரு சீசனில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய வரலாறை படைத்தார். இதற்கு முன்பு 2012-ம் ஆண்டில் கிறிஸ் கெய்ல் பெங்களூரு அணிக்காக 15 ஆட்டங்களில் 59 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
அவரது 14 ஆண்டு கால சாதனைக்கு சூர்யவன்ஷி முடிவு கட்டியுள்ளார். இதனை பாராட்டும் விதமாக ”நியூ சிக்ஸ் மிஷின்” என கிறிஸ் கெய்ல் தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்துள்ளார். ”அதிவேக சதம் விளாசிய எனது சாதனையை ஒருநாள் நீ முறியடிப்பாய்” எனவும் கிறிஸ் கெய்ல், சூர்ய வன்ஷியை பாராட்டியுள்ளார்.
