ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, குரோஷியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கியது.
குரூப் L பிரிவில் டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹாரி கேன் 2 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
போட்டியின் 11-வது நிமிடத்தில் நோனி மடுவேகே மீது லூகா மோட்ரிச் பெனால்டி பகுதியில் விதிமீறல் செய்ததால் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஹாரி கேன் அடித்த பெனால்டியை குரோஷிய கோல்கீப்பர் டொமினிக் லிவாகோவிச் தடுத்தார். ஆனால் VAR பரிசோதனையில் கோல்கீப்பர் முன்கூட்டியே கோல் கோட்டைக் கடந்திருந்தது தெரியவந்ததால் மீண்டும் பெனால்டி வழங்கப்பட்டது. இரண்டாவது வாய்ப்பில் கேன் கோல் அடித்து இங்கிலாந்துக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த குரோஷியா, 36-வது நிமிடத்தில் மார்டின் பட்டுரினா அடித்த கோலின் மூலம் ஆட்டத்தை 1-1 என சமநிலைப்படுத்தியது. லூகா சுசிச் மேற்கொண்ட சிறப்பான தாக்குதலுக்குப் பிறகு கிடைத்த பந்தை பட்டுரினா சக்திவாய்ந்த ஷாட்டாக மாற்றி கோல் அடித்தார்.
எனினும், முதல் பாதி முடிவதற்கு முன் 42-வது நிமிடத்தில் ஹாரி கேன் மீண்டும் கோல் அடித்து இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் முன்னிலைக்கு கொண்டு சென்றார்.
இரண்டாம் பாதியில் ஜூட் பெல்லிங்ஹாம் அற்புதமான கோல் ஒன்றை பதிவு செய்து இங்கிலாந்தின் முன்னிலையை அதிகரித்தார். பின்னர் மாற்று வீரராக களமிறங்கிய மார்கஸ் ராஷ்ஃபோர்டும் ஒரு கோல் அடித்ததால் இங்கிலாந்து 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஹாரி கேன் படைத்த சாதனைகள்
2018, 2022 மற்றும் 2026 ஆகிய மூன்று வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் கோல் அடித்த இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஹாரி கேன் பெற்றார். இதற்கு முன் இந்த சாதனையை டேவிட் பெக்காம் (1998, 2002, 2006) மட்டுமே நிகழ்த்தியிருந்தார்.
உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 10 கோல்கள் அடித்துள்ள கேன், இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர வீரர் கேரி லினேக்கரின் சாதனையை சமன் செய்தார்.
உலகக் கோப்பை வரலாற்றில் பெனால்டி ஷூட்-அவுட் அல்லாத பெனால்டி வாய்ப்புகளில் அதிக கோல்கள் (5) அடித்த வீரர் என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார்.
பெரிசிசின் அரிய சாதனை
இந்தப் போட்டியில் குரோஷியாவின் இவான் பெரிசிச் ஒரு கோலுக்கான உதவியை (Assist) வழங்கியதன் மூலம், நான்கு வெவ்வேறு உலகக் கோப்பை தொடர்களில் அசிஸ்ட் பதிவு செய்த இரண்டாவது வீரராக மாறினார். இந்த அரிய சாதனையை இதற்கு முன் அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மட்டுமே நிகழ்த்தியிருந்தார்.
