தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 17-ஆவது சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல், விசிக கட்சிகளின் உதவியுடன் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.
கடந்த மே மாதம் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 144 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார். இந்த வாக்கெடுப்புக்கு பின்னர் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல்நாளான இன்று மரபுப்படி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரை நிகழ்த்த உள்ளார். இதற்காக இன்று காலை 9.55 மணிக்கு சட்டப்பேரவைக்கு வருகைதரும் ஆளுநரை, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், சட்டசபை செயலாளர் சாந்தி ஆகியோர் வரவேற்கின்றனர்.
பின்னர் சட்டப்பேரவைக்குள் வந்து சபை நடவடிக்கைகள் தொடங்கியதும், தவெக அரசின் சார்பில் தயாரித்து அளிக்கப்பட்டுள்ள உரையை கவர்னர் ஆங்கிலத்தில் வாசிப்பார். அவரது உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து கவர்னரின் உரையை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழில் வாசிப்பார். அத்துடன் இன்றைய நிகழ்ச்சிகள் முடிவடையும். அதன் பிறகு அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் நடைபெறும். அப்போது சட்டப்பேரவையின் நிகழ்வுகள் குறித்து முடிவு செய்யப்படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version