தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வீரர் கெய்க்வாட் சதமடித்து கலக்கினார்.
ராய்ப்பூரில் இன்று தெ.ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா 14 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து 3வது விக்கெட்டுக்கு கோலியுடன் கெய்க்வாட் ஜோடி சேர்ந்தார்.
வழக்கத்திற்கு மாறாக, கெய்க்வாட் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். தெ.ஆப்பிரிக்க பந்துவீச்சை தொடர்ந்து கோலியுடன் சேர்ந்து வெளுத்து கட்டினார். இதேபோல் கோலியும் பேட்டிங்கில் அசத்தினார்.
இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் போல அதிகரித்தது. சிறப்பாக ஆடிய கெய்க்வாட் 77 பந்துகளில் சதமடித்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் கோலியும் சதத்தை நெருங்கி வருகிறார்.
பின்னர் 105 ரன்களை எடுத்திருந்தபோது கெய்க்வாட் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியுடன் கே.எல். ராகுல் ஜோடி சேர்ந்தார்.
