இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதும் 3வது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடர் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், தற்போது சமநிலையில் உள்ளது. கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில், 28 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியாவின் அதிரடி ஆட்டம் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியைப் பெற்றது. ஆனால், முல்லான்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில், தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு பதிலடி கொடுத்தது.
குயின்டன் டி காக் அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் எடுத்த 90 ரன்கள் மூலம் தென்னாப்பிரிக்கா அணி 213 ரன்கள் என்ற பெரிய இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்தது. அதனால், இந்திய அணியின் சேஸ் ஆரம்பத்திலேயே தடுமாறியது. இறுதியில் ஓட்னியல் பார்ட்மேனின் 4/24 என்ற சிறப்பான பந்துவீச்சால் இந்தியாவை 162 ரன்களுக்குள் சுருட்டி, தென் ஆப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைச் சமன் செய்தது. தொடரில் முன்னிலை பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், ரசிகர்கள் தற்போது 3வது டி20 போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான 3வது டி20 போட்டி டிசம்பர் 14 (இன்று) நடைபெற உள்ளது. இந்தப் போட்டி ஹிமாச்சலப் பிரதேசம், தர்மசாலாவில் நடக்கிறது. இந்திய நேரப்படி, இந்தப் போட்டியானது இரவு 7:00 மணிக்குத் தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது 6:30 மணிக்கு டாஸ் போடப்படும்.
இந்தப் போட்டியை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரலையாகக் கண்டு ரசிக்கலாம். அதே சமயம், மொபைல் மற்றும் இணையதளத்தில் பார்க்க விரும்புபவர்கள், ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி (iOS & Android) மூலம் நேரலையாகப் போட்டியை பார்த்து ரசிக்கலாம்.
