மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
சர்வதேச கபடி சம்மேளனம் சார்பில் இரண்டாவது மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரானது வங்கதேச தலைநகர் தாக்காவில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முதல் முறையாக இந்தியா தவிர்த்து வேறு நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் சற்று கூடுதலாகவே இருந்தது.
மொத்தம் 11 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, வங்கதேசம், ஈரான் மற்றும் சீன தைபே அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 33-21 என்ற கணக்கில் ஈரான் மகளிர் அணியையும், சீன் தைபே அணி 25-18 என்ற கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
நேற்றைய தினம் இந்தியா மற்றும் சீன தைபே அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி அடுத்தடுத்து புள்ளிகளை வென்று அசத்தியது. அதேசமயம் சீன தைபே அணியும் விட்டுக்கொடுக்காமல் விளையாட ஆட்டத்தின் பரபரப்பு கூடியது.
இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 20 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், சீன தைபே மகளிர் அணியால் 16 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் பாதியில் முன்னிலை பெற்றுது.
பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி முன்னிலையைத் தக்கவைத்ததுடன், 15 புள்ளிகளை வென்றது. மறுபக்கம் இறுதிவரை போராடிய சீன தைபே மகளிர் அணியால் இரண்டாம் பாதியில் 12 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு கபடி உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
