2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் ஜாஸ்பிரித் பும்ரா விளையாட தொடங்கினார். இந்திய அணிக்கு மிக முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பார்க்கப்படும் அவர் நிறைய போட்டிகளில் இந்திய அணியின் நிலைமையை சிக்கலில் இருந்து நல்ல நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதீத திறமை வாய்ந்த அவர் கடைசியாக இந்திய அணிக்கு 2023 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியிருந்தார்.

அதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ஒரு போட்டியில் கூட ஜாஸ்பிரித் பும்ரா விளையாடவில்லை. கிட்டத்தட்ட 736 நாட்கள் ஆகியும் இந்திய அணி அவரை எந்த ஒரு நாள் தொடரிலும் சேர்க்கவில்லை.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற நவம்பர் 30ம் தேதி துவங்க இருக்கிறது. அந்த தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணியில் கூட அவர் பெயர் இடம்பெறாதது குறித்து இந்திய ரசிகர்கள் தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

பணிச்சுமை காரணமாகவும் அவருக்கு காயம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும் ஓய்வு கொடுப்பது அவசியம் தான். ஆனால் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரை இரண்டு ஆண்டுகளாக விளையாடாமல் வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடக்க இருப்பதால் இப்பொழுது இருந்து அவர் விளையாடினால்தான் சரியாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
