விஜய் ஹசாரே போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடவுள்ளதை அந்த அணி (டிடிசிஏ) நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
டி20 கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற கோலி, இந்திய அணிக்காக தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில், சர்வதேச போட்டியில் விளையாடும் வீரர்கள், கட்டாயம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டுமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதையடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான விஜய் ஹசாரே போட்டியில் விராட் கோலி, டெல்லி அணிக்காக விளையாட இருக்கிறார். 50 ஓவர்களை கொண்ட போட்டி, அகமதாபாத்தில் வருகிற 24ம் தேதி தொடங்குகிறது.
டெல்லி அணி மொத்தம் 7 போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்த 7 போட்டிகளிலும் கோலி விளையாடுவாரா எனத் தெரியவில்லை. தெ.ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி 6-ம் தேதி முடிகிறது. பிறகு ஜனவரி 5ம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில் நடக்கும் போட்டிகளில் மட்டுமே, டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடக்கூடும் என கூறப்படுகிறது.
கடைசியாக 2009-10ம் ஆண்டில் டெல்லி அணிக்காக கோலி, விஜய் ஹசாரே போட்டிகளில் விளையாடி இருந்தார்.
