பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் (34), சர்வதேசக் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக முறைப்படி அறிவித்துள்ளார்.

இதன் மூலம், சுமார் 16 ஆண்டுகள் நீடித்த அவரது சர்வதேச கால்பந்து பயணம் முடிவுக்கு வந்துள்ளது. நெய்மரின் இந்த அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சான்டோஸ் (Santos) கிளப் அணியின் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நெய்மர், “தேசிய அணியுடனான எனது பயணம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. பிரேசில் அணிக்காக விளையாடியதில் சரித்திரம் படைத்திருக்கிறேன். தேசிய அணிக்காக எனது ரத்தத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்தேன். இனி பிரேசில் அணிக்காக விளையாடப் போவதில்லை” என உருக்கமாகத் தெரிவித்தார். உலகக் கோப்பைத் தொடரில் பிரேசில் அணி ‘ரவுண்ட் 16’ சுற்றோடு வெளியேறியதைத் தொடர்ந்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு பிரேசில் அணியில் அறிமுகமான நெய்மர், இதுவரை 129 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் பிரேசில் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரானார். மேலும், 2013-ல் ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் அணிக்குத் தலைமை தாங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தங்கப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்தார். பல காயங்கள் மற்றும் சவால்களைக் கடந்து ஒரு தலைமுறையின் மிகச்சிறந்த கால்பந்து முகமாகத் திகழ்ந்த நெய்மரின் ஓய்வு கால்பந்து வரலாற்றில் ஒரு பொற்காலத்தின் முடிவாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version