தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், புதிய தவெக அரசின் செயல்பாடு மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு நிலைப்பாடு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியான பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது கட்சியின் முக்கிய நிர்வாகி ராஜசேகர் மற்றும் பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய ஆட்சி மற்றும் அதன் ஆயுள் காலம் குறித்துப் பேசிய டி.டி.வி.தினகரன், “சினிமாவில் (ரீலில்) வேண்டுமானால் எளிதாக ஆட்சி நடத்திவிடலாம், ஆனால் நிஜத்தில் (ரியலில்) அப்படி நடத்த முடியாது. நிஜம் என்ன என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள். தற்போதைய தவெக ஆட்சியின் ஆயுள் காலம் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களின் ஆட்சி முறை குறித்து இன்னும் மூன்று மாதங்களுக்குப் பிறகு நாம் விரிவாகப் பேசலாம். தவெக-வில் தற்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.”

மேலும், குதிரை வேகத்தில் செயல்படுவோம் என்று கூறும் விஜய், உண்மையில் எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசித்தான் வாங்கியுள்ளார் என்றும், தவெக செய்தது அப்பட்டமான ‘குதிரை பேரம்’ என்பதை நாங்கள் விரைவில் நிரூபிப்போம் என்றும் சாடினார்.

அதிமுக மற்றும் அமமுக தரப்பிலிருந்து தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து தினகரன் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்தார். தவெக அரசுக்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அல்லது அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-வை அபகரித்து அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், அதற்கு எதிராக சி.பி.ஐ விசாரணை கோரி சட்டப்பூர்வமாக அணுகுவோம்.

மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் கூறும் பொய்கள் அவருக்கே எதிராகத் திரும்பும். அவர் காரில் அமர்ந்து கொண்டு ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டதை வீடியோ எடுத்தது யார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும் என்றார்

அதிமுகவை முழுமையாக அழிப்பதற்காக, தவெக-வின் ஏஜெண்டாக செங்கோட்டையன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுகவை ஊழல் கட்சி என்று ஏளனமாகப் பேசிய விஜயை, பதவிக்காக அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஆதரிப்பது எப்படி நியாயமாகும்? இதை ஆதரிப்பது அறம் என கூறினால் அதை உண்மை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரலாறு அவர்களை மன்னிக்காது.

கூட்டணி மற்றும் ஆதரவு அரசியல் குறித்துப் பேசிய அவர், “மீண்டும் ஒரு தேர்தல் வந்துவிடுமோ என்ற பயத்தினால்தான் சில கட்சிகள் தவெக-விற்கு ஆதரவு அளித்துள்ளன. இது தர்மத்திற்கு எதிரானது. காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தற்பொழுது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அமைச்சர் பதவிகளைப் பெற வேண்டும் என்ற சுயநலத்திற்காகத்தான் காங்கிரஸ் இதைச் செய்துள்ளது. ஆனால், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய இரு கட்சிகளும் அமைச்சர் பதவி கேட்கவில்லை; ஒருவேளை அவர்கள் கேட்டிருந்தால் அவர்களின் மானமே போயிருக்கும்” என்று சுட்டிக்காட்டினார்.

அதிமுகவின் தற்போதைய உட்கட்சிப் பூசல்களைப் பார்த்து பாஜக தலைவர்கள் வருத்தப்படுவதாகத் தெரிவித்த தினகரன், அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசினார், “எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுகவில் பல சலசலப்புகள் வந்துள்ளன. இதையெல்லாம் கடந்துதான் கட்சி வளர்ந்துள்ளது. அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய சாதனை படைக்கும். அதற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். நாம் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தான் தொடர்ந்து நீடிக்கிறோம். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் தற்போதைய சூழலில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.”

மாற்றத்தை விரும்பிய மக்கள், நடந்து முடிந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடங்களைக் கொடுத்து ஜனநாயகத்தைக் காப்பாற்றியுள்ளனர் என்று குறிப்பிட்ட தினகரன், கட்சி கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக தவெக-வை ஆதரிப்பது, சொந்தக் கட்சியையே அழிப்பதற்குச் சமம் என்று கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version