டெல்லியில் நடைபெற்ற இந்தியத் துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் (NRAI) 75-வது ஆண்டு நிறைவு விழாவில், ஒலிம்பிக் பதக்க நாயகி மனு பாக்கரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி, இந்திய விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தையும் சமூக வலைதளங்களில் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.

ஒலிம்பிக் சாதனையாளர்களைக் கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்ட அந்த மேடையில், சம்பந்தமே இல்லாமல் 15 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். சமீபத்தில் ஐபிஎல் (IPL) ஏலத்தில் கவனம் ஈர்த்த வைபவ் பற்றி மனு பாக்கரின் கருத்து என்ன என்பதே அந்த கேள்வி. பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாற்றுச் சாதனை படைத்த ஒரு வீராங்கனையிடம், அவரது சாதனைகளைக் கொண்டாட வேண்டிய இடத்தில் கிரிக்கெட் குறித்துப் பேசச் சொன்னது ரசிகர்களைக் கொதிப்படையச் செய்துள்ளது.

https://x.com/PTI_News/status/2048741874358431822? 

மனு பாக்கரின் பதில்: இந்தத் தேவையற்ற கேள்வியால் சற்றும் நிலைகுலையாத மனு பாக்கர், தனது வழக்கமான அமைதியுடன் மிக முதிர்ச்சியான பதிலை அளித்தார். அவர் கூறுகையில், “திறமைக்கு வயது ஒரு தடையல்ல. சரியான வழிகாட்டுதலும், நல்ல மனிதர்களின் துணையும் இருந்தால் 6 வயதிலும் சாதிக்கலாம், 60 வயதிலும் சாதிக்கலாம். அவருக்கு (வைபவ்) சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் நிச்சயம் அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக வருவார்,” எனப் பொதுப்படையாகத் தெரிவித்து அந்தச் சூழலை மிக நேர்த்தியாகக் கையாண்டார்.

சமூக வலைதளங்களில் வெடித்த கண்டனம்: மனு பாக்கரின் பதில் பாராட்டுகளைப் பெற்றாலும், அந்த செய்தியாளரின் அணுகுமுறை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பிரபல விளையாட்டு வர்ணனையாளர் ஜாய் பட்டாச்சார்யா இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிடுகையில், “அவர் ஒரு ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர். அவரிடம் வைபவ் பற்றிப் பேசுவது அவரது உழைப்புக்கும் விளையாட்டுக்கும் செய்யப்படும் அநீதி. முடிந்தால் அடுத்த முறை வைபவ் சூர்யவன்ஷியிடம் மனு பாக்கர் பற்றி கேள்வி கேட்டுப் பாருங்கள், அப்போது தெரியும்,” எனச் சாடியுள்ளார்.

“இரண்டு ஒலிம்பிக் பதக்கங்கள் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரை விடவும் மேலானது; ஊடகங்கள் எப்போதுமே கிரிக்கெட்டைத் தூக்கிப் பிடிப்பதை நிறுத்தப் போகின்றன?” எனப் பலரும் இணையத்தில் தங்களது அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர். ஒலிம்பிக் வீரர்களுக்குக் கிடைக்க வேண்டிய தனித்துவமான அங்கீகாரம், கிரிக்கெட்டின் நிழலில் மறைக்கப்படுவதையே இந்தச் சம்பவம் காட்டுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version